1 Shaktijind

The Dance Of The Sarus Essays Of A Wandering Naturalist

தமிழ்த் திரைப்பட வரலாற்றாசிரியராக அடையாளம் பெற்றவர் சு. தியடோர் பாஸ்கரன். தமிழகத் தலைமை அஞ்சல் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், சூழலியல் எழுத்து-விழிப்புணர்வு சார்ந்து பெரும் பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்து பிறகு தமிழுக்கு வந்த இவர், மேற்கண்ட துறைகள் சார்ந்து 45 ஆண்டுகளுக்கு மேலாகப் பங்களித்திருக்கிறார்.

சூழலியல் பிரச்சினைகள் சார்ந்து தமிழில் பரவலான வாசகர்களின் கவனத்தை ஈர்த்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. சுவாரசியம் இல்லாத வறட்டு அறிவியலாக முன்னிறுத்தாமல் சுய அனுபவம், இலக்கியம், பண்பாட்டுப் பின்னணிகளை அடிப்படையாகக்கொண்டு சூழலியலை எழுதியதன் மூலம், தான் கவனப்படுத்த நினைக்கும் விஷயத்தை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுவது அவருடைய எழுத்துத் திறம்.

பண்டைய தமிழ்ச் சொற்களை மீட்டெடுப்பது, உரிய சொற்களைத் தேடி எடுத்துப் பயன்படுத்துவது எனச் சூழலியல் சொல்லாடலுக்கான புது மொழியைக் கட்டமைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார். தமிழில் உருப்பெற்றுவரும் பசுமை இலக்கியத்துக்கு, இவருடைய பங்களிப்பு முக்கிய அடித்தளமாகத் திகழ்கிறது.

கனடாவில் உள்ள தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’ – வாழ்நாள் சாதனை விருது 2013-ல் இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் மதிப்புறு காட்டுயிர் பாதுகாவலராக இருந்துள்ள இவர், உலக இயற்கை நிதியத்தின் - இந்தியக் கிளை (WWF - India) அறங்காவலராக இருந்திருக்கிறார்.

இப்போதும் தொடர்ச்சியாக எழுத்து, கூட்டங்கள், பயிலரங்குகள் என்று வலம்வந்து கொண்டிருக்கும் அவருக்கு வயது 76. சூழலியல் சார்ந்த பங்களிப்பு குறித்து சென்னை பெசன்ட் நகரில் அவரை சந்தித்து உரையாடியதிலிருந்து சில பகுதிகள்:

இயற்கைக்கும் மனிதருக்குமான உறவு அடைந்திருக்கும் மாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தொல்காலத்தில் மனிதரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஓவியம் இருந்தது. தங்கள் வீட்டுச் சுவர்களையும் உடல்களையும் சித்திரங்களால் அலங்கரித்துக்கொண்டார்கள். ஆனால், பிற்காலத்தில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட ஓவியம், சட்டகம் போடப்பட்ட தனி அம்சமாக மாறியது. இதுபோலவே முற்காலத்தில் இயற்கை அம்சங்கள், வாழ்க்கையின் ஒரு பகுதியாக இயல்பாகவே நீடித்துவந்தன. ஆனால், இன்று சுற்றுச்சூழல், இயற்கை சார்ந்த கரிசனம் தனியாகப் பார்க்கப்படுகிறது. பள்ளி நாட்களில் நாங்கள் இயற்கையிடமிருந்து அந்நியப்பட்டிருக்கவில்லை.

எங்கள் ஊரான தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஜீவநதி என்று குறிப்பிடுவார்கள். கரையை ஒட்டி எங்கள் பள்ளி அமைந்திருந்தது. ஆழம் அதிகமற்ற அந்த ஆற்றின் கரையிலேயே எங்களுடைய ஓய்வு நேரமெல்லாம் கழியும். அதைச் சுற்றியுள்ள வறண்ட புதர்க் காட்டுப் பறவைகள், மரங்கள் எல்லாமே எங்களுக்குப் பரிச்சயம். மரங்களே கதியாகக் கிடப்போம். காட்டுப்புறா, கல்கௌதாரி, குள்ளநரி, கொம்பேறிமூக்கன் பாம்பு போன்றவற்றையெல்லாம் சாதாரணமாகப் பார்த்திருக்கின்றோம். சுற்றுவட்டாரத்தில் வயல்களும் கிணறுகளும் நிறைந்திருந்தன. இப்படிப் பள்ளி வாழ்க்கை முழுக்க இயற்கை எங்களுடன் இரண்டறக் கலந்திருந்தது.

காட்டுயிர் ஆர்வம் சார்ந்த உங்கள் பயணத்துக்கு எது உந்துதலாக அமைந்தது?

பள்ளி வாழ்க்கையின் தொடர்ச்சியாகக் கல்லூரியிலும் புறவுலகு சார்ந்த பிரக்ஞையும் விழிப்பும் இருந்தன. இயல்பாகவே அமைந்திருந்த பிரக்ஞை அது. முதுகலை வரலாறு படிப்பதற்காக சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தேன். அந்தக் கல்லூரியின் மிகப்பெரிய வளாகமே கடலோரப் புதர்காட்டு வகைத் தாவரங்களைக் கொண்டதுதான். தாவரங்களும் பறவைகளும் அங்கே பெருகியிருந்தன. அந்தக் காலத்தில் கணிதப் பேராசிரியர் கிஃப்ட் சிரோன்மணி பறவை ஆர்வலர் குழு ஒன்றை உருவாக்கினார். ஆறு, காடு, கல்லூரி வளாகம் என்று அந்தக் குழுவினருடன் செல்வேன். பறவைகளை நோக்குவதில் ஆர்வமும் அவற்றை அடையாளம் கண்டதறிதலில் தேர்ச்சியும் வளர ஆரம்பித்தன.

பறவை நோக்குதல் என்பது ஒரு தனி உலகம் என்பது புரிய ஆரம்பித்தது. இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களுக்குப் பறவைகள் பற்றிய செய்தி மடல் (Newsletter for Birdwatchers) ‘சைக்ளோஸ்டைல்’ செய்து விநியோகிக்கப்பட்டது. இந்தச் செய்தி மடல் இன்றும் அச்சு வடிவில் பெங்களூரில் வெளியாகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் பார்த்த பறவைகளைப் பற்றிய புதிய விவரங்களை இதில் பதிவுசெய்வார்கள். அதுவரை தாவரங்களின் பெயரை மட்டுமே பரவலாக அறிந்திருந்த எனக்கு, இந்த அனுபவங்கள் மூலம் தமிழ்நாட்டுப் பறவைகள் குறித்த விவரங்கள் தெரிய வந்தன. பறவையியல் துறையின் ஆழமும் புரிந்தது.

இயற்கை மீதான நேசம் அதிகரித்ததற்கான சம்பவங்கள் என எவற்றைச் சொல்வீர்கள்?

கல்லூரிப் படிப்பு முடித்த பின் மத்திய அரசு பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டு, ஆறு மாதப் பயிற்சிக்காக முசௌரி சென்றிருந்தேன். இமயத்தில் அமைந்திருக்கும் ஊர். இமயமலையின் பிரம்மாண்டம் என்னை ஈர்த்தது, அங்கு பெற்ற அனுபவங்கள் மனதிலிருந்து அழிக்க முடியாதவை. வார இறுதிகளில் அருகிலுள்ள கிராமங்களுக்கு கானுலா (டிரெக்கிங்) புறப்பட்டுவிடுவோம். அங்கே சிறிய கால்வாய்போல், ஆனால் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜமுனா நதிக் கரையோரம் வெகு தூரம் நடந்து செல்வோம்.

3உணவு, தங்குமிடம் பற்றியெல்லாம் கவலைகள் இருந்ததில்லை. ஒரு தடித்த கம்பளியைப் பைக்குள் போட்டுக்கொண்டு கிளம்பிவிடுவோம். அருகில் இருக்கும் வனத்துறை விடுதி அல்லது கிராமத்தில் ஒரு வராந்தாவிலேயே தங்குவோம். இமயமலையின் கணக்கற்ற பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால், நேரம் போவதே தெரியாது. இப்படியாக இயற்கை, புற உலகு மீதான ஈர்ப்பு என் வாழ்க்கையில் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது.

பறவைகளின் தேடலில் மனம் திளைத்துக் கிடந்த ஏதாவது ஒரு நிகழ்வை நினைவுகூர முடியுமா?

1966-ல் அஞ்சல் துறை கோட்ட மேலாளராகத் திருச்சியில் பணியில் அமர்த்தப்பட்டேன். ஒரு நாள் விடியற்காலையில் திருச்சி-தஞ்சை சாலையில் உள்ள தேவராயன் ஏரியில் பறவைகளைப் பார்க்க மோட்டார்சைக்கிளில் புறப்பட்டேன். அந்த ஏரிக்குக் காவலராக இருந்த நடராசன், சலிம் அலியின் ‘இந்தியப் பறவைகள்’ புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். பறவைகளை நோட்டமிட்டுக்கொண்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். பனிமூட்டம் சுற்றுப்புறத்தைச் சூழ்ந்திருந்தது.

அப்போது Bar headed goose என்றறியப்படும் பட்டைத்தலை பெருவாத்துக் கூட்டம் ஒன்று, மூடுபனியினின்று வெளிப்பட்டுக் குரலெழுப்பியவாறே தரையில் இறங்கியது. அந்த அற்புதக் காட்சி ஓர் ஆழ்ந்த அனுபவமாக மனதில் பதிந்தது. கீழிறங்கும்போது, கார் ஹாரன்போல வாத்துகள் சத்தமிட்டது மனதிலிருந்து அகலவில்லை. வீட்டுக்கு வந்த பிறகு, அந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனத் தோன்றியது.

இயற்கை சார்ந்து எப்போது எழுதத் தொடங்கினீர்கள், அந்தப் பயணத்தின் பாதை எப்படி விரிந்தது?

பல காலமாக திருச்சிப் பகுதிக்கு வலசை வந்துகொண்டிருக்கும் பட்டைத்தலை பெருவாத்து பற்றி 700 வார்த்தைகளில் ‘தி இந்து சண்டே மேகஸி’னில் (1968) ஒரு கட்டுரை எழுதினேன். அதுதான் இயற்கை சார்ந்து நான் எழுதிய முதல் கட்டுரை. அப்போது அந்தப் பறவை வடக்கிலிருந்து தமிழகத்துக்கு வலசை வருவது மட்டுமே அறியப்பட்டிருந்தது. அது லடாக் பகுதியில் இனப்பெருக்கம் செய்வதெல்லாம் பிறகுதான் கண்டறியப்பட்டது. அன்றைய தமிழகத்தில் அன்னம் என்று குறிப்பிடப்பட்ட பறவை, இதுதான் என்பது என் அனுமானம். முன்பு ஆயிரக்கணக்கில் தமிழகத்துக்கு வந்துகொண்டிருந்த இந்தப் பெருவாத்துக் கூட்டம், இன்றைக்குக் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகிறது.

முதல் கட்டுரை பிரசுரமான பிறகு, ‘தி இந்து’வில் (ஆங்கிலம்) பணிபுரிந்த எஸ்.வி. கிருஷ்ணமூர்த்தி இயற்கை, காட்டுயிர்கள் தொடர்பாக எழுதுவதற்கு ஊக்குவித்தார். தொடர்ந்து ‘தி இந்து’வில் எழுத ஆரம்பித்தேன்; இன்றுவரை எழுதிவருகிறேன். அப்போது வந்த Illustrated Weely of India, India Magazine போன்ற சஞ்சிகைகளிலும் எழுதினேன்.

நீங்கள் தமிழில் எழுதுவதற்கு ஆங்கிலத்தில் எழுதிய அனுபவம் எவ்வகையில் உதவியது? தமிழில் எழுதுவதை எப்படி உணர்கிறீர்கள்?

ஆங்கில இதழ்களில் எழுதிவந்ததால், வாசகருக்கு எப்படி ஒரு கருத்தை சொல்வது - உணர்த்துவது, கட்டுரையின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குப் பிடிபட்டிருந்தது. இந்த நிலையில், ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் தமிழில் எழுத ஊக்கமளித்தார். கலை ஆய்வாளர் ஆனந்தகுமாரசாமி பற்றி வங்க இயக்குநர் சித்தானந்த தாஸ்குப்தா இயக்கிய ‘டான்ஸ் ஆஃப் சிவா’ (Dance of Siva) என்ற ஆவணப் படத்தைப் பற்றி ‘கசடதபற’ இதழில் முதன்முறையாக எழுதினேன். ‘சிவதாண்டவம்‘ என்ற அந்தக் கட்டுரை பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. அதன் பிறகு, இயற்கை சார்ந்தும் தமிழிலும் எழுத ஆரம்பித்தேன்.

பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நேரம். ‘உயிர்மை' இதழ் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரனும் பத்திரிகையாளர் தளவாய்சுந்தரமும் என்னைச் சந்தித்தார்கள். இயற்கை, காட்டுயிர், சுற்றுச்சூழல் சார்ந்து எழுத வேண்டுமென்றும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுடன் மக்களை நேரடியாகத் தொடர்புபடுத்தும் வகையில் சமூகநீதி பார்வையிலிருந்து கவனப்படுத்தலாம் என்றும் கூறினார்கள். அப்படி எழுத ஆரம்பித்ததுதான் ‘மூங்கில் இலை மேலே’ என்ற சுற்றுச்சூழல் தொடர்பான கட்டுரைத் தொடர்.

அந்தத் தொடரில் வெளியான முதல் வரிசைக் கட்டுரைகளும், ஏற்கெனவே நான் எழுதியிருந்த சுற்றுச்சூழல் கட்டுரைகளும் சேர்ந்து ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக’ என்ற தொகுப்பாக வெளியானது. முதல் பதிப்பு வெளியாகி 10 ஆண்டுகள் ஆன பிறகும், இப்போதும் இந்தப் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. எனக்கு ‘இயல் விருது’ கிடைப்பதற்கு உயிர்மையில் எழுதிய கட்டுரைகள் ஒரு காரணம் என்று நான் நம்புகிறேன். தமிழில் எழுதுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

எந்தத் தமிழ் இதழில் நான் எழுதினாலும், அதை வாசித்துவிட்டு யாராவது ஒருவர் தொலைபேசியில் கூப்பிட்டு கட்டுரையை சிலாகித்துப் பேசுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த உற்சாகம் அளிக்கின்றன. அந்த வகையில் ஆங்கிலத்தில் எழுதுவதைவிட, தமிழில் எழுதுவது பரவலான கவனத்தைப் பெறுகிறது. தமிழ் வாசகர்களுக்கு எழுதுவது அதிக மனநிறைவையும் தருகிறது.

தமிழ் மொழியின் வளம் சூழலியல் எழுத்துக்குப் போதுமானதாக உள்ளதா?

சமூத்தில் புதிய கரிசனங்கள் உருவாகும்போது, புதிய சொல்லாடல்களுக்கு மொழியைத் தயார்படுத்தவும் பலப்படுத்தவும் மேம்படுத்தவும் வேண்டும்.

சுற்றுச்சூழல், காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்தும் மொழி மேம்படுத்தப் பட்டால்தான், பெருமளவு மக்களின் ஆர்வத்தை அது சார்ந்து திருப்ப முடியும், நிதர்சனத்தில் அவற்றைக் காப்பாற்ற முடியும். எடுத்துக்காட்டாக, உலகில் வாழும் மிகப் பெரிய எருது இனமான Gaur தென்னிந்தியக் காடுகளில், நமக்கு மிக அருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அதைக் காட்டெருமை என்று தவறாகக் கூறிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், அது காட்டெருது.

தமிழில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்த பிறகு, சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இயற்கை குறித்த செய்திகளை இன்றைய தமிழுடன் தொடர்புபடுத்தத் தவறிவிட்டோம் என்பதை உணர்ந்தேன். தமிழ் போன்ற வளம்மிக்க மொழியில் இயற்கை சார்ந்த சொற்கள், வர்ணனைகள் பொக்கிஷம் போல் குவிந்துகிடக்கின்றன. அந்தச் சொற்களை மீட்டெடுத்துப் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

ஆங்கிலம் நம் மண்ணில் நுழைந்து நிலைபெறுவதற்கு முன்வரை, நம்மைச் சுற்றி வாழ்ந்த உயிரினங்களுக்கு நிச்சயமாக உள்ளூர் பெயரும் இருந்திருக்க வேண்டும். நாம் அவற்றை இழந்துவிட்டோம். இதனால் நம்மிடம் முன்பு இருந்து, தற்போது அற்றுப்போய்விட்ட உயிரினங்கள் குறித்து முழுமையாக அறிய முடியாமல் போகிறது.

இந்தக் குறைகளைக் களைய ஏதேனும் முயற்சிகள் எடுத்துவருகிறீர்களா? இது தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் தேவை என நினைக்கிறீர்கள்?

ஒரு கருத்தாக்கத்தை மக்களிடம் தெளிவாக முன்வைப்பதற்குச் சிக்கலற்ற-ஆழமான பொருள் கொண்ட சொற்களும் மொழியும் தேவை.

தமிழில் சுற்றுச்சூழல் சொற்களை முறையாகப் பிரயோகிக்காததால் பெரும் குழப்பம் நிலவுகிறது. Sustainable development, Carrying capacity, Climate change, Global warming எனப் பல முக்கிய கருத்தாக்கங்களுக்கான தமிழ்ச் சொற்றொடர்கள் என்ன? இந்தச் சொற்களைத் தமிழில் உருவாக்கும் முயற்சியில், ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு பல்வேறு தமிழ் கலைச்சொற்கள் புழக்கத்தில் விடப்படுகின்றன. இதனால் குழப்பம் அதிகரிக்கிறது. இந்த விஷயத்தில் ஆர்வம் கொண்ட நாங்கள் சிலர் Tamilbioterms google group என்ற குழுவில் இணைந்திருக்கிறோம், அவ்வப்போது மின்னஞ்சலில் தொடர்புகொள்கின்றோம். வருடம் ஒரு முறை சந்திக்கிறோம்.

தமிழ் எழுத்துலகில் பசுமை இலக்கியத்தின் நிலைமை எப்படி உள்ளது?

தமிழில் புனைவு இலக்கியமும் கவிதைகளும் போற்றப்படுகின்றன. கட்டுரை இலக்கியம் பெரும்பாலும் கவனிக்கப்படுவது இல்லை. மற்ற துறை சார்ந்த எழுத்துக்கு முக்கியத்துவம் தரப்படாததில் வெளிப்படும் அக்கறையின்மைக்கு, இது முக்கிய எடுத்துக்காட்டு.

சங்கப் பாடல்களில் இயற்கை தனித்துத் துருத்திக்கொண்டு இருக்கவில்லை. அன்றாட வாழ்வில் இழைந்தோடும் ஒரு அம்சமாக இருந்தது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் போவதை விவரிக்கும்போதுகூட, இயற்கைக் கூறுகள் இயல்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இன்று இயற்கை அந்நியமாகிவிட்டது. ‘ரப்பர்’, ‘காடு’, ‘சாயாவனம்’ போன்ற விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நாவல்கள், சோ. தர்மன், பெருமாள் முருகன், தி. ஜானகிராமன் போன்ற ஒரு சிலரின் எழுத்து மட்டுமே இயற்கை சார்ந்து பேச முனைந்த புனைவு இலக்கியங்கள். தமிழில் பசுமை இலக்கியம் பெரிய அளவில் வரவேண்டிய அவசியம் இருக்கிறது. கட்டுரை இலக்கியத்தின் இன்னொரு பரிமாணம்தான் பசுமை இலக்கியம். ச. முகமது அலி, ப. ஜெகநாதன் உள்ளிட்டோர் இயற்கை சார்ந்து எழுதிவருவது நல்ல அறிகுறி.

இப்படிச் சிறிய அளவில் தொடங்கும் விஷயங்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக முக்கியமான மாற்றங்களை நிகழ்த்தும் என்று நான் நம்புகிறேன்.இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, உயிர்மை (2004)

தாமரை பூத்த தடாகம், உயிர்மை (2005)

வானில் பறக்கும் புள்ளெலாம், உயிர்மை (2012)

சோலை எனும் வாழிடம், உயிர்மை (2014)

கானுறை வேங்கை, உல்லாஸ் கரந்த், காலச்சுவடு (2006) (மொழிபெயர்ப்பு)

மழைக்காலமும் குயிலோசையும், மா. கிருஷ்ணன், காலச்சுவடு (2003) (தொகுப்பாசிரியர்)

The Dance of the Sarus: Essays of a Wandering Naturalist, Oxford University Press (1999)

The Sprint of the Black Buck, (Editor), Penguin (2010)

பாஸ்கரனின் சூழலியல் நூல்கள்

- 'தி இந்து' பொங்கல் மலர் 2017-ல் வெளியான நேர்காணலின் சுருக்கமான பகுதி

A lifelong dog lover, S. Theodore Baskaran has raised many dogs, including two Indian breeds. He has been associated with the Kennel Club of India, Chennai, and was a member of the show committee. He was instrumental in bringing out a set of four postage stamps on indigenous breeds of dogs.

Baskaran is a well-known naturalist and conservationist. He served two terms as a trustee of WWF India and has been an honorary wildlife warden in Chennai. His book The Dance of the Sarus: Essays of a Wandering Naturalist was published in 1999. He edited a book on Indian wildlife, The Sprint of the Blackbuck. He writes frequently on conservation for The Hindu and Frontline. He has also contributed to important anthologies such as An Anthology of Indian Wildlife, Waterlines: Rivers of India and Voices in the Wilderness. He writes on conservation in Tamil in magazines like Uyirmmai and Kalachuvadu and also has three books on conservation in Tamil to his credit. He believes that to make conservation a people’s movement the discourse has to be in local languages.

Baskaran’s other scholarly interests include film studies and art history, areas in which he has published books and articles. His book, The Eye of the Serpent, won the National Award for Best Writing on Cinema, 1997. He was awarded the Iyal Virudhu for Lifetime Achievement in Tamil Writing by the Canada-based Literary Garden.

He is a graduate of the National Defence College. He retired as Chief Postmaster General of Tamil Nadu. He lives with his wife in Bangalore.

Related

Leave a Comment

(0 Comments)

Your email address will not be published. Required fields are marked *